அம்பிகை அடியார்களே !
காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவமானது 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெறும் வாஸ்து சாந்திக் கிரியைகளுடன் ஆரம்பமாகி 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடனும் மறுநாள் 12.04.2025 சனிக்கிழமை இரவு இடம்பெறும் வைரவர் பூஜையுடனும் முடிவடையவுள்ளது.
இதனை முன்னிட்டு 01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை அனுக்ஞை, வாஸ்து சாந்தி இடம்பெறுவதுடன் மறுநாள் 02 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை காலை 10.00 மணிக்கு கும்ப பூஜை பகல் 12.00 மணிக்கு விசேட பூஜை, மாலை 6.00 மணிக்கு அபிஷேக பூஜை, அதனைத் தொடர்ந்து ஆன்மீகச் சொற்பொழிவும் இலங்கை வானொலி புகழ் கதாப்பிரசங்க வித்தகர் கலைமாமணி புலவர் சின்னத்தம்பி சிறிதயாளன் முன்னைநாள் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அவர்களின் கதாப்பிரசங்கமும் 7.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் அம்பாள் உள் வீதி, வெளி வீதி உலாவருதலும் இடம்பெறும்.
08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பாற்குட பவனியும் 09 ஆம் திகதி புதன்கிழமை மாலை அம்பாள் விநாயகர், முருகப் பெருமான் சகிதம் தேரோடும் வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பிரத்தில் திருவுலா வருதலும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சமுத்திரத் தீர்த்தோற்சவம் என்பன இடம்பெறுவதுடன் 12 ஆம் திகதி மாலை இடம்பெறும் பைரவர் பூஜையுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.
உற்சவகால கிரியைகள் யாவும் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்சன் குருக்கள் தலைமையில் நடைபெறும்.
மகேஸ்வர பூஜை (அன்னதானம்) பைரவர் பூஜை திரு.மா.வித்தியானந்தன் குடும்பத்தினர். திரு.சமரக்கோன் லோகேஸ்வரன் குடும்பத்தினர்.
குறிப்பு -
அம்பாளின் சப்புர ஊர்வலமானது தங்குதடையின்றி வீதிவழியாகச் செல்ல தேரோடும் வீதிவாழ் மக்கள் தங்கள் வீடுகளில் வீதிக்குக் குறுக்காக நிற்கும் மரங்களை முன்கூட்டியே வெட்டி அகற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் பக்தர்களின் வசதிகருதி நிகழ்வுகள் யாவும் உரிய நேரத்தில் நடைபெறவிருப்பதால் பக்த அடியார்கள் நேரகாலத்துடன் வருகைதந்து உற்சவ நிகழ்வுகளில் கலந்துகொண்டு அம்பாளின் நல்லருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம
இவ்வண்ணம்,
ஆலயத் தர்மகர்த்தாக்களும், நிர்வாக சபையினரும்
ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்,
காரைதீவு.