உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்கள் இரு துறவிகளை ஈந்த காரைதீவு மண்ணிற்கு விஜயம் நாளை திங்கட்கிழமை (2025.02.17) செய்யவுள்ளார்.
மாலை 04.00 மணிக்கு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகை தரும் சுவாமிகள் விசேட பூசையின் பின்னர் இலங்கை மண்ணின் முதல் இராமகிருஷ்ணமிஷன் துறவி சுவாமி விபுலானந்த அடிகளாரின் பிறந்த இல்லத்திற்கு விஜயம் செய்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு பின்னர் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றத்திலிருந்து ஊர்வலமாக கொம்புச் சந்தி வரை கலை நிகழ்வுகளுடன் ஊர்வலமாக அழைத்துவரப்படவுள்ளார். அதைத் தொடர்ந்து கொம்புச் சந்திக்கு அருகாமையில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் வளகத்தில் மத்திய வீதியில் அமையப்பெற்றுள்ள “சாரதா பவன்” எனும் பெண் துறவிகளுக்கான தங்குமிடத்தினை திறந்து வைப்பதுடன், தொடர்ந்து விபுலானந்தா மத்திய கல்லுரிக்குச் செல்லும் வீதியில் அழைந்துள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ணர் திருக்கோவிலில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இராமகிருஷ்ண மிஷனுடன் தொப்புள் கொடி உறவுகொண்டுள்ள என்றும் துறவிகளால் ஆசீர்வதிக்கப்பட்டு வருகின்ற எமது மக்கள் இந்த நிகழ்வுகளில் (குறிப்பாக சுவாமி விபுலானந்த மணிமண்டபத்திலிருந்து ஆரம்பமாகும் ஊர்வலத்திலிருந்து ) கலந்துகொள்வதுடன் அதிவணக்கத்திற்குரிய சுவாமிகளின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றம் தொடக்கம் கொம்புச் சந்தி வரையுள்ள வீதிகளின் இருமருங்கிலும் அச்சூழலில் வசிக்கும் அன்பர்கள் நிறைகுடம் வைத்து மாலை அணிவித்து சுவாமிகளை வரவேற்று நல்லாசிகளைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம்
நிகழ்வு ஒருங்கிணைப்புக் குழு