கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமை !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 27 நவம்பர், 2023

கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமை !!!

 

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.


தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம் என்பார்கள். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். 


கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். 


இந்த கார்த்திகை தீபத்தில் தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபங்கள் ஏற்றுவதுதான் சிறப்பு. இவை அஷ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களை குறிக்கும்.


பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நட்சத்திரங்களின் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நட்சத்திரங்களில் ஒரு தினமான புனித தினமே திருக்கார்த்திகை நாள். 


இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களை விடவும் விமரிசையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. 


மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு ஜோதி வடிவாக காட்சியளிக்கச் செய்து, சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். இல்லங்களையும் வர்த்தக நிலையங்களையும் விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் மிதக்க வைத்து வழிபடுவர்.


கார்த்திகை விழாவைக் குமராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர். 


குமராலய தீபம்: முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். 


விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள். 


சர்வாலய தீபம்: ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். 


படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் 'நானே பெரியவன்' என்று வாதாடி பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். 


அடியையும் முடியையும் தேடும்படி, அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று வேண்ட அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகைத் தீப வழிபாடாகும். 


மகா தீபம்


தமிழகத்தில் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னிக்குரிய திருத்தலமான திருவண்ணாமலையில் இக்கார்த்திகை விழா "மகாதீபம்" எனும் திருநாமத்துடன் வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 


இது திருவண்ணாமலையின் சிகரத்தின் மீது தீபம் ஏற்றும் விழாவாகும். திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் இது 10ஆம் நாள் திருவிழா ஆகும். இம்மகாதீபம் இலக்கியங்களில் "சர்வாலய தீபம்" மற்றும் "கார்த்திகை விளக்கீடு" என்றும் அழைக்கப்படுகிறது.


தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதை பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை "மகாதீபம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னிப் பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.


1668இல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் இவ்வெண்கல கொப்பரையாகச் செய்து கொடுத்தார். 


பின்பு 1991இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது. 


பரணி தீபம்


காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்" எனப்படுகிறது. 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும். 


பர்வத ராஜ குலத்தினர்....


இம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் "செம்படவர்கள்" எனப்படுவர். சிவன் படையினர் செம்படவர்கள். இதன் நினைவாக இவர்களுக்கு இவ்வுரிமை வழங்கப்படுகிறது. இவர்கள் தங்களுக்குள் முறை போட்டுக்கொண்டு ஆண்டுதோறும் மலை மீது தீபம் ஏற்றுகின்றனர். 


மலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபதரிசனம் காண்பிக்கப்படும். இந்நேரத்தில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இத்தீபத்தைக் காண அலைமோதும். 


தீபம் ஏற்றும் நேரம் நெருங்கியவுடன் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுவார். இறைவன் தேவிக்கு தன்னுடைய இடப்பக்கத்தை அளித்து திருக்காட்சி கொடுத்தார். அதன் நினைவாக 3 நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வந்து தரிசனம் தருவார். பின்பு உடனே மலையில் 6 மணிக்குத் தீபம் ஏற்றுவர். அப்பொழுது அடியார்களின்  "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று முழக்கம் இடுவார்கள். 


கிரிவலம்...


கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையை வலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருதல் அவர்களுக்கு பாவ விமோசனம் நிச்சயம் கிடைக்கும். கர்ம வினைகளைப் போக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 


இலங்கை, இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் தேசங்களில் "கார்த்திகை தீபத்திருநாள்" வெகு விமரிசையாக பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 


- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்


Post Bottom Ad

Responsive Ads Here

Pages