விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும்.
இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விரதம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.
21 நாட்களும் ஒரு பொழுது உண்டு. இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர், கரும்பு, மோதகம், அவல், எள்ளுருண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும். 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம்) படிக்க வேண்டும்.
கேட்க, வேண்டும் (இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21 முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்). அடுத்த நாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விரதத்தை நிறைவெற்ற வேண்டும்.
ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நூல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்ப மூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர். “சாந்த” வழிபாடுகள் செய்யும் மக்கள் விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சக்தி வணக்க உடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.