காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன் நியமிக்கப்பட்டார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் முன்னிலையில், காரைதீவு கோட்டக் கல்விப்பணிமனையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் .
கல்முனை வலய கணித பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் கடமைக்கு மேலதிகமாக இந் நியமனம் வழங்கப்படுகிறது.
கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜே.டேவிட் ஓய்வுபெற்றதையடுத்து இந் நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
கடமைப்பொறுப்பேற்பு நிகழ்வில் காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபீர், திருமதி வரணியா சாந்தரூபன், திருமதி எம்.எச். றியாசா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2017 இல் இலங்கை கல்வி நிருவாக சேவையில் இணைந்து கொண்ட ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன் கிழக்கு பல்கலைக்கழக பௌதீகவிஞ்ஞான பட்டதாரியாவார். காரைதீவைச் சேர்ந்த இவர் தற்போது கல்விமுதுமாணி, விஞ்ஞான முதுமாணி பட்டப் பின்பட்டப் படிப்பை தேசிய கல்வி நிறுவனம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொடருகிறார்.