அம்பாறை மாவட்டத்தின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இம்மாவட்டத்தில் நெல்லுக்கான கிராக்கி அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் வயலை உழுவதிலும் விதைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்முறை அம்பாறை மாட்டத்தில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கரில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மாவட்டத்திலுள்ள டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரம் மற்றும் ஏனைய நீர்தாங்கு நிலைகளின் விவசாயிகளுக்கு தேவையான நீர் காணப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ஒலுவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின்பெரும்போக வேளாண்மைச் செய்கைக்காக ஏர்பூட்டும் விழா அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம தலைமையில் டீ.எஸ்.சேனநாயக்கா குளத்தருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அம்பாறை மாவட்டம் , அட்டாளைச்சேனை ,சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு ,நிந்தவூர், பிரதேச செயலக பிரிவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது ,காரைதீவு, நிந்தவூர், நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, அஸ்ரப் நகர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் மீண்டும் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றது. காட்டு யானைகளின் தொல்லையால் குறித்த கிராமங்களில் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.
(பாறுக் ஷிஹான்)