இந்து கலாசார திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த உலகப் புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசனுக்கு அம்பாறை மாவட்டத்தில் பெரும் கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது. காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத்தால் 'ஓவிய வித்தகர்' என்ற விருதும், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல சமூகத்தால் 'ஓவிய சாகரர்' என்ற விருதும் வழங்கி,பொன்னாடைகள் போர்த்தி அவர் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வு காரைதீவு சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெற்றது .
அங்கு ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் சிவஸ்ரீ சாந்ததரூபன் ஆகியோர் வேதபாராயணம் ஓதி ஆசி வழங்கினர்.
முன்னதாக நாவலர் பெருமானின் திருவுருவச் சிலைக்கு ஓவியர் பத்மவாசன் உருத்திராக்க மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவர் பிறந்த இல்லத்தில் விசேட பூஜையும் இடம்பெற்றது.
கௌரவிப்பு நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன், மணிமண்டப முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, மணிமண்டப உபதலைவர் சோ.ஸுரநுதன், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் கண. இராஜரெத்தினம் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.