ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் என்பவற்றின் நிதிப்பங்களிப்பில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ‘நவபோச’ சத்துமா வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்றது.
இவ் வைபவம் காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி டாக்டர் நடராஜா அருந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை ஆதாரவைத்திய சாலையின் பிரதிவைத்திய அத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரன், காரைதீவு பிரதேச
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர், காரைதீவின் சமூக சேவையாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து நவபோஷா பொதிகளை வழங்கி வைத்தனர்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம், காரைதீவின் சமூக சேவையாளர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இருநூறு ‘நவபோஸா ‘ பொதிகள் காரைதீவுக்கு வழங்கப்பட்டது.
அதன் பலனாக காரைதீவு பிரதேசத்தில் ஒரு தொகுதி தாய்மார்களுக்கான சத்துமா பொதிகள் முதல் கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது.
கல்முனை ஆதாரவைத்திய சாலையில் 800 பொதிகள் கல்முனைப் பிராந்திய கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.