ஆழிப்பேரலையின்போது காரைதீவுக் கடலோரத்தில் அழிவடைந்த பனைமரங்களுக்குப் பதிலாக 25ஆயிரம் பனைவிதைகளை நடும் வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
பனைஅபிவிருத்திச்சபை மற்றும் காரைதீவு பிரதேச செயலகத்தோடு இணைந்து காரைதீவு விளையாட்டுக்கழகம் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதன் அங்குரார்ப்பண வைபவம், காரைதீவு காளிகோவில் கடலோர முன்றலில் சுகாதாரநெறிமுறைக்கிணங்க நடைபெற்றது.
காரைதீவு விளையாட்டுக்கழகத்தலைவர் கி.சசிகரபவானின் அழைப்பில் அங்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், பனைஅபிவிருத்திச்சபை மாவட்ட முகாமையாளர் ரி.விஜயன், தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எ.எம்.றியாஸ் ,காரைதீவு விளையாட்டுக்கழக போசகர் வி.ரி.சகாதேவராஜா ,பிரதி திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.மோகனகுமார் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துசிறப்பித்தனர்.
கற்பகதருவான பனையின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் அங்கு உரையாற்றியதையடுத்து, கடலோரத்தில் குழிகள் வெட்டப்பட்டு பனைவிதைகள் அதிதிகள் தொடக்கம் கலந்துகொண்ட அனைவராலும் நடப்பட்டன.
பிரதேசசெயலக கிராமசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கழக உறுப்பினர்கள் என பலதரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கழக செயலாளர் வெ.உதயகுமாரன் கலந்துகொண்ட அதிதிகள் மற்றும் ஏனையோருக்கு நன்றிசெலுத்தினார்.
( வி.ரி.சகாதேவராஜா)