இந்துக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களுள் நவராத்திரி விரதம் முக்கியமானதாகும். சக்தியை நோக்கி 9தினங்கள் விரதமிருந்து அனுஸ்டிக்கும் மகத்தானவிரதம். இவ்விரதம் இன்று 7ஆம் திகதி முதல் 9தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு 15ஆம் திகதி விஜயதசமியுடன் நிறைவடையவுள்ளது.
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது.
பேரழிவுக் காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும் அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின. பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது.
நவராத்திரி விழா
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு கரண புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.
விஜய தசமி
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால் விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.
கன்னி வாழை வெட்டல்
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.
கொலுவைத்தல்
இதன்போது கொலுவைத்தல் முக்கியமானதொரு அம்சமாகக்கருதப்படுகிறது. அது பற்றி இங்கு பார்க்கலாம்.
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதன் படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம்.
இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.
முதல்படி - ஓரறிவு உயிர்ப் பொருட்களான புல் செடி கொடி போன்ற தாவர பொம்மைகள்
இரண்டாம்படி - இரண்டறிவு கொண்ட நத்தை சங்கு போன்ற பொம்மைகள்
மூன்றாம்படி - மூன்றறிவு உயிர்களான எறும்பு ஊறும் உயிரின பொம்மைகள்
நான்காம்படி - நான்கறிவு உடைய நண்டு வண்டு பொம்மைகள்
ஐந்தாம்படி - ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகள் பறவைகள் பொம்மைகள்
ஆறாம்படி - ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்
ஏழாம்படி - மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்
எட்டாம்படி - தேவர்கள் உருவங்கள் நவக்கிரக அதிபதிகள் பஞ்சபூத தெய்வங்கள் அஷ்டதிக் பாலகர்கள் முதலிய பொம்மைகள்
ஒன்பதாவதுபடி - பிரம்மா விஷ்ணு சிவன் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி லட்சுமி பார்வதி பொம்மைகள் (ஆதிபராசக்தி நடுவில்) இருத்தல் வேண்டும்.
வி.ரி.சகாதேவராஜா