காரைதீவைச்சேர்ந்த ஆசிரியரும் ,சோதிடக்கலைஞருமான கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் எழுதிய 'ஷஷ்டியப்தம்' என்ற சோதிட நூல் வெளியீட்டு நிகழ்வு காரைதீவில் நடைபெற்றது.
எமது வாழ்க்கையை செம்மைப்படுத்தக்கூடிய பல பெறுமதி வாய்ந்த குறிப்புகளை உள்ளடக்கிய ஆக்கத்தொகுப்பு நூலான 'ஷஷ்டியப்தம்' ,ஆசிரியரும் சோதிடக்கலைஞருமான கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் தனது 60ஆவது அகவையையொட்டி எழுதி வெளியிட்ட நூலாகும்.
85சிறுசிறு தலைப்புகளில் 130 பக்கங்களைக்கொண்டதாக அமைந்துள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வு, கொவிட் காரணமாக மிகவும் எளிமையாக குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் சுகாதாரநடைமுறைகளுடன் இடம்பெற்றது.
'இராகி' என அழைக்கப்படும், பிரபல எழுத்தாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான இரா.கிருஸ்ணபிள்ளை முன்னிலையில் அவரது இல்லத்தில் இந்நூல் வெளியீட்டுநிகழ்வு இடம்பெற்றது. எழுத்தாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜாவும் கலந்துசிறப்பித்தார்.
ஆசிரியரும் ,சோதிடக்கலைஞருமான கருணாகரம்பிள்ளை ரவீந்திரன் முதல்பிரதியை தனது குடும்பத்தார் சகிதம் மூத்தஎழுத்தாளர் இரா.கிருஸ்ணபிள்ளையிடம் வழங்கிவைத்தார். பதிலுக்கு அவர் எழுதிய 'கசப்பும் ஒருநாள் இனித்திடும்' என்ற நாவல் நூலை ஆசிரியர் க.ரவீந்திரனிடம் கையளித்தார்.