பணியாளர்களை ஊக்குவிப்பதற்காக பணிப்பாளர் சுகுணணும் பங்கேற்பு..
கல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில் காரைதீவுப்பிரதேசம் நடமாடும் சேவையூடாகவும் தடுப்பூசி செலுத்தி மொத்தமாக 80வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது.
தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்கு வரமுடியாதவர்கள் சுகவீனமுற்றவர்கள் மாற்றுத்திறாளிகள் வயோதிபர்கள் சுயநினைவற்றவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு கடந்த இருநாட்களில் நடமாடும் சேவையூடாக வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.
காரைதீவுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான குழுவினர் இவ்விதம் நடமாடும் சேவையில் தடுப்பூசி வழங்கப்படுவதையறிந்த கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் களத்திற்கு விஜயம் செய்து கலந்துகொண்டார்.
டாக்டர் தஸ்லிமா பஷீர் உள்ளிட்ட சுகாதாரக்குழுவினரை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்குமுகமாக தான் அதில் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்:
எமது கல்முனை பிராந்தியத்திற்கு உட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினில் இன்றுவரை 84% அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அந்த வைத்திய அதிகாரியின் தலைமைத்துவமும் அவரின் கீழான ஆளணியினரின் செயற்பாடும் காரணமாக அமைகின்றது.
அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இன்று நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையில் நானும் இணைந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருந்தேன். எவரெவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்களோ அவரவரை நாங்கள் முன்னிலைப்படுத்தி ஊக்கப்படுத்துவது அவசியமல்லவா. என்று சொன்னார்.
காரைதீவுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் கூறுகையில்:
நாம் இதுவரை காரைதீவில் சுமார் 9ஆயிரம் வக்சீன்களை செலுத்தியுள்ளோம். இது எமது இலக்குதொகையில் 84வீதமாகும்.எனவே வரமுடியாதவர்களுக்காக நடமாடும்சேவையை ஆரம்பித்தோம்.சுமார் 300பேருக்கு நடமாடும்சேவையூடாக தடுப்பூசி செலுத்தமுடிந்தது.அதனையறிந்து எமது பணிப்பாளர் டாக்டர் சுகுணன் அவர்கள் எம்முடன் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தியமை மகிழ்ச்சியாகவுள்ளது.எமது குழுவினருக்கும் புதுதெம்பை ஊட்டியுள்ளது. நாம் இன்னமும் உற்சாகமாக பணியாற்றவுள்ளோம் என்றார்.
(வி.ரி.சகாதேவராஜா)