அரசாங்கம், ஆலயங்களை திருவிழா மற்றும் பூஜைவழிபாட்டுக்கு திறக்க அனுமதி வழங்கியதையடுத்து அம்பாறை மாவட்ட ஆலயங்களில் , திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி சம்மாந்துறை கோரக்கர் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் (14.07.2021) பாற்குடபவனியுடன் ஆரம்பமாகியது.
கொவிட் காரணத்தினால் , ஆலய நிருவாகத்தினர் மற்றும் உபயகாரர் கே.ஜெயசிறில் உள்ளிட்டோர் மாத்திரம் சுகாதாரமுறைப்படி கலந்துகொண்ட பாற்குடபவனி இடம்பெற்றது.
வழமைபோல சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலயத்திலிருந்து விசேடபூஜையுடன் ஆரம்பமான பாற்குடபவனி, நேராக கோரக்கர் அகோரமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது. வழமைக்கு மாறாக இம்முறை பெண்கள் அதிகளவில் பாறங்குடமேந்தி பவனியில் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு பாற்குட் சொரிதலுடன் விசேட பூஜையும் இடம்பெற்றது.தீமிதிப்பு உற்சவமானது நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 23ஆம் திகதி தீமிதிப்பு வைபவத்துடள் நிறைவடையவிருக்கிறது.
அரசாங்க சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த 10ஆம் திகதி இறுதியாக வெளியிட்ட சுற்றுநிருபப்படி ஆலயம் மற்றும் தேவாலயங்களின் உற்சவங்களின்போது 50பேர் கலந்துகொள்ளமுடியுமென்று தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(வி.ரி.சகாதேவராஜா)