முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(19.07.2021) - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 19 ஜூலை, 2021

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(19.07.2021)

முத்தமிழ் வித்தகர் ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாதவை..

(முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(19.07.2021). இதனை முன்னிட்டு மேற்படி சிறப்புக்கட்டுரை பிரசுரமாகிறது)

முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால் முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலாநந்தர். அவரின் 74வது சிரார்த்த தினம் இன்றாகும்.

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆற்றிய அளப்பரிய பணிகளை இன்றும் வையகம் நினைவில் கொண்டிருக்கிறது.

அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக பாடசாலைகளின் முகாமையாளராக பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக அறிஞராக ஆராய்ச்சியாளராக மொழிபெயர்ப்பாளராக முத்தமிழ் வித்தகராக விளங்கியவர் விபுலானந்தர்.சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும் தமிழுக்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வனவாகும்.

தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப் பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியுடன் முன்னேற்றமான கருத்துக்கள் பொதிந்துள்ளனவாய் இருந்தாலும் அவை பழைய யாப்பமைதியோடும், தமிழ் மரபோடும் பொருந்தாமையினால் உண்மையான தமிழ்க் கவிகளல்ல என இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் வெறுத்தனர்.அப்பாடல்களுக்குரிய மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர்.

ஆனால், அடிகளார் அண்ணாமலை நகரை அடைந்த போது அங்கு 'பாரதி கழகம்' என்ற சங்கமும் கூட்டி அப் பாட்டுக்களை இசை அறிந்த புலவரைக் கொண்டு இசையுடன் பாடுவித்தார்.

அதன் பின்னரே பாரதியாரின் புகழும், பாராட்டுக்களும் தமிழ் நாடெங்கணும் பரவின.தேடாதிருந்த பாரதியாரை தமிழுலகம் கனம் பண்ண வைத்த பெருமை விபுலானந்த அடிகளாருக்கே உரியதாகும்.

பாரதியாரைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்து விட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டிகளில் தொட்டிகளில் கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும் பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே.

பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத அபிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.

படித்தவர்கள் இவிபுலானந்தரின் அறிவை மதித்தவர்கள் அவருக்குப் பதவி அளித்தவர்கள் எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவ விட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?

விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால்,தமிழ்நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால் மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும். பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்றுநீரிலே எறிந்து அழித்ததைப் போல தீயிலே போட்டு எரித்ததைப் போல சாதிவெறி பிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.


சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற 'கங்கையில் விடுத்த ஓலை' என்னும் அடிகளாரின் கவிதை மலரும் மற்றைய இனிமையான கவிதைகளும் எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக் கொண்டிருக்கின்றன.

அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது.


 விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா



 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages