பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை மற்றும் சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் செயற்பாட்டிற்கு தேவையான 2 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை இலங்கை பொலிஸிற்கு குறியீட்டு ரீதியாக வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வலுவான போக்குவரத்து அமைப்பு காணப்பட வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு இந்த முச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இதன்போது குறியீட்டு ரீதியாக மீகொட, கொத்தட்டுவ, யக்கல, பெம்முல்ல, பல்லேவெல, மிஹிஜய செவன, குருந்துவத்த, எகொடஉயன மற்றும் மத்தேகொட பொலிஸ் நிலையங்களுக்கான முச்சக்கர வண்டிகள் அப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
முச்சக்கர வண்டிகளை குறித்த பொலிஸ் நிலையங்களின் குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை, பல்வேறு முறைபாடுகளை விசாரித்தல், 119 அவசர அழைப்புகளுக்காக ஈடுபடுத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தல், உளவுத்துறை பணிகள் மற்றும் சிவில் கடமைகளுக்காக பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புறங்களை விரைவில் அணுகும் வசதிக்கமைய பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தி பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவடிக்கையும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக செயற்படுத்தப்படும்.
வரி கட்டணமின்றி கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த முச்சக்கர வண்டிகளுக்காக அரசாங்கம் 829 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி சரத் வீரசேகர, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் C.B.ரத்நாயக்க, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜகத் அல்விஸ், பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.