கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2021 ம் ஆண்டுக்கான மாகாண இலக்கிய விழாவில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய போட்டிகளை நடாத்தி விருது வழங்கி கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கான பூரண விபரங்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களை பாராட்டி கௌரவிப்பதன் மூலம், அவர்களது கலை இலக்கியப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு படைப்புலக முன்னோடிகளாக அவர்களை இனங்காட்டுவதனை நோக்கமாகக் கொண்டதாக இந்த விழா அமையும்.
பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விருதுகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. இலக்கிய படைப்புகளுக்கான விருது வழங்கல்:
இலக்கியப் படைப்புகளுக்கான விருது வழங்கலின் பொருட்டு 2020 ம் ஆண்டு பிரசுரமான சிறந்த நூல்கள், குறும்திரைப்பட ஆக்கங்களைத் தேர்வு செய்யும் வண்ணம், கிழக்கு மாகாண எழுத்தாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தமது படைப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 2020 ம் ஆண்டு தை 01 ந் திகதி தொடக்கம் 2020 மார்கழி 31 ந் திகதி (01. 01. 2020 – 31. 12. 2020) வரையிலான காலப்பகுதியில் முதலாம் பதிப்பாக வெளியிடப்பட்ட கிழக்கு மாகாண எழுத்தாளர்களுடைய நூல்களின் தலா நான்கு (04) பிரதிகளை தேர்வுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும். குறும் திரைப்படப் பிரதிகளாயின் கடந்த இரண்டு வருடங்களுக்குள் (2019, 2020) தங்களால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் இரண்டு பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.
எம்மால் தேர்வு வகுதிகளாக குறிக்கப்பட்டுள்ள புத்தகங்கள் சரியான பிரிவினுள் உள்ளடங்கும் வண்ணம் பிரிவு குறிக்கப்பட வேண்டும். தாங்கள் விண்ணப்பித்த பிரிவினுள் உள்ளடக்கப்பட முடியாத (புத்தகங்கள்) நூல்கள் நிராகரிக்கப்படும்.
தொழில்சார் எழுத்தாளர்கள் போட்டிக்கு விண்ணப்பிக்குமிடத்து ஏனைய கலைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தெரிவின் போது சந்தர்ப்பம் வழங்கப்படும்.
படைப்புக்களை 01. 04. 2021 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலின் மூலமாக அல்லது நேரடியாக 'மாகாணப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கி.மா), திருகோணமலை' என்னும் முகவரிக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் 'கிழக்கு மாகாண இலக்கிய படைப்புக்களுக்கான தேர்வு - 2020' என குறிப்பிடல் அவசியமாகும்.
நூல் விருது வழங்கலுக்கான ஆக்கங்கள், படைப்புக்கள், நூற்பிரதிகள் யாவும் ஆகக்குறைந்தது 200 பக்கங்களையாவது கொண்டிருக்க வேண்டும். குறைந்த பக்கங்களையுடைய படைப்புக்களுக்கு புள்ளிகள் வகுத்து வழங்கப்படும்.
சிறுவர் இலக்கியத்திற்கான படைப்புக்கள் ஆகக்குறைந்தது 80 பக்கங்களையாவது கொண்டிருக்க வேண்டும். குறைந்த பக்கங்களையுடைய படைப்புக்களுக்கு புள்ளிகள் வகுத்து வழங்கப்படும். (ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர் இலக்கிய படைப்புக்களை அனுப்புபவருக்கு கூடுதலான புள்ளிகள் வழங்கப்படும்)
1. அ. விருது வழங்கலுக்கான ஆக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு கீழ்க்காணும் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மொழியில் பிரசுரமான படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
1. சுய நாவல்
2. சுய சிறுகதை
3. சுய கவிதை : (சுயகவிதை என்னும் வகுதிக்குள் மரபுக்கவிதை, புதுக்கவிதை, குறுங்காவியம் என்பன உள்ளடங்கும்)
4. நாடகம், நாட்டுக்கூத்து
5. அறிவியலும் தொழில்நுட்பமும்
6. புலமைத்துவ மற்றும் ஆய்வு சார் படைப்பு (சமூகவியல், மானிடவியல், மெய்யியல், கல்வியியல் மற்றும் திரைப்படத்துறை)
7. வரலாறு மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள்
8. சமூக விஞ்ஞானம் சார்ந்த நூல்கள் (சோதிடம், ஆன்மீகம், ஆயுள்வேத மருத்துவம்)
10. நாட்டார் இலக்கியம் மற்றும் அழகியல் சார்ந்தவை
11. பெண்ணியம் சார்ந்த படைப்புக்கள்
12. இலக்கிய சஞ்சிகைகள்
1. ஆ. சிறுவர் இலக்கியம்:
இம்முறை சிறுவர் இலக்கியத்திற்கான பகுதிகள் பின்வரும் வகுதிகளாக வகுக்கப்படுகின்றன:
(1) சிறுவர் கவிதைகள் மற்றும் சிறுவர் பாடல்கள்.
(2) சிறுவர் கதைகள்.
(3) சிறுவர் நாடகங்கள்
(4) சிறுவர் இலக்கியம் தொடர்பான ஆய்வுகள்.
1. இ. குறும்பட ஆக்கங்கள்:
குறும்பட ஆக்கத்திற்காக விண்ணப்பிப்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்குள் (2019, 2020) தம்மால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை அனுப்பி வைக்கலாம். ஒரு திரைப்படத்தின் இரண்டு பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 026 – 2220036, 026 2220076 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். விண்ணப்பப்படிவங்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும், கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
2. கிழக்கு மாகாணத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்காக காத்திரமான பங்களிப்புக்களை ஆற்றிய, ஆற்றி வருகின்ற கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவிப்பதற்கான விருது வழங்கல்:
2021 ம் ஆண்டுக்கான இலக்கிய விழாவின் போது, கிழக்கு மாகாணத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்காக, காத்திரமான பங்களிப்புக்களை ஆற்றிய, ஆற்றி வருகின்ற கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவித்து விருது வழங்குவதற்கு, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களை நிரந்தர வதிவிடமாக கொண்ட இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள், துறைசார் வல்லுனர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
(கடந்த 2020ம் வருடம் வரை '60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கலைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' என்று வகுக்கப்பட்டிருந்த தகுதியை மாற்றுமாறு பல எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கலைஞர்கள் விடுத்த வேண்டுகோள்களுக்கு அமைவாக, ஆகக்குறைந்த வயது 45 என மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறாக மாற்றியமைத்த பின்னர் எமக்கு அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றமையால், கலைஞர் தெரிவில் சிறந்த மற்றும் மூத்த கலைஞர்கள் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பம் வெகுவாகக் காணப்பட்டது. இதனை மாற்றியமைக்கும் முகமாக இந்தவருடம் (2021) இந்த வயதெல்லை 50 என மாற்றியமைக்கப்படுகின்றது.)
விண்ணப்பிப்போர் 31.12.2020 ம் திகதியன்று 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
தொழில்சார் கலைஞர்கள் போட்டிக்கு விண்ணப்பிக்குமிடத்து, முன்னுரிமை அடிப்படையில், ஏனைய கலைஞர்களுக்கு; தெரிவின் போது சந்தர்ப்பம் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட உரிய ஆவணங்களை எதிர்வரும் 01. 04. 2021 ம் திகதிக்கு முன்னர் தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிடம் அல்லது கலாசார உத்தியோகத்தரிடம் கையளிக்கவும். (எக்காரணம் கொண்டும் திணைக்களத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டாம்)
3. கிழக்கு மாகாண 'இளங் கலைஞர் விருது' வழங்கல்:
கலை இலக்கியத்துறையில் சாதனை படைத்த, படைத்து வருகின்ற இளங் கலைஞர்களை பாராட்டி விருது வழங்குவதற்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கலைகளை வளர்ப்பதற்காக பாடுபடுகின்ற இளைய தலைமுறை கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும், அத்தகைய இளையோரை கௌரவிப்பதனூடாக மேலும் கலைகளில் ஈடுபாடும் வளர்ச்சியும் காண வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்பாராட்டு வழங்கப்படுகின்றது. ஆகக்குறைந்தது ஐந்து வருடங்கள் கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட இளங் கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், துறைசார் வல்லுனர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட உரிய ஆவணங்கள், எதிர்வரும் 01. 04. 2020 ம் திகதிக்கு முன்னர் தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிடம் அல்லது கலாசார உத்தியோகத்தரிடம் கையளிக்கவும்.
4. நூல் கொள்வனவு – 2020:
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் 'கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்யும் திட்டமானது' இவ் வருடமும் இடம்பெற உள்ளது 01.01.2020 தொடக்கம் 31. 12. 2020 வரை கிழக்கு மாகாண படைப்பாளிகளால் வெளியீடு செய்யப்பட்ட நூல்கள் எமது திணைக்களத்தின் நூல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளது. நூலை வழங்க விரும்பும் வெளியீட்டாளர்கள், உரிய விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து இரண்டு (02) நூற்பிரதிகளுடன் அனுப்பி வைக்கலாம்.
அனுப்பி வைக்கப்படும் நூல்கள் அனைத்தும் கொள்வனவு செய்யப்படும் என உறுதியளிக்க முடியாது. (கடந்த காலங்களில் கொள்வனவுத் திட்டத்தினுள் உள்வாங்கப்படாத விண்ணப்பதாரரிற்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்). தகுந்தவை தெரிவுக் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நூல்களை எதிர்வரும் 01. 04. 2020 க்கு முன்னர் எமது திணைக்கள முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தருடன் அல்லது பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 026 - 2220036 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் போட்டியாளர்கள் எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கலைமன்றங்களில் ஒரு அங்கத்தவராக இணைந்திருந்து தாம் வாழும் பிரதேசத்தில் கலை இலக்கியத்துறைகளில் ஈடுபட்டு வருபவர்களாயின் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விசேட புள்ளிகள் வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவங்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். http://www.ep.gov.lk எனும் வலைத்தளத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் திகதியின் பின்னர் கிடைக்கப்பெறும் எவ் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
வி.ரி.சகாதேவராஜா