நீண்டகாலமாக நிலவிவந்த காரைதீவு சித்தானைக்குட்டிபுர கிராம மக்களின் குடிநீர் மற்றும் மலசலகூடப்பிரச்சனையை காரைதீவு 1967நண்பர்கள் அமைப்பினர் பகுதியளவில் நிறைவேற்றி கையளித்துள்ளனர்.
அக்கையளிப்பு வைபவம் நேற்று 1967 நண்பர்கள் அமைப்பின் தலைவரும் சிரேஸ்ட படவரைஞருமான செ.மணிச்சந்திரன் தலைமையில் சித்தானைக்குட்டிபுரம் பகுதியில் எளிமையாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் கௌரவஅதிதியாக தேசியநீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் காரைதீவுநிலையப் பொறுப்பதிகாரி வி.விஜயசாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக அதிதிகள் அப்பகுதிகளில் நிழல்தரு மற்றும் கனிதரு மரங்களை பரவலாக நட்டனர். தொடர்ந்து இரண்டு மலசகூடங்களைக் கையளிக்கும் நிகழ்வும் 9வீடுகளுக்கான குழாய்நீர் இணைப்பு கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.
இவற்றை தேசியநீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை மற்றும் பொதுமக்கள் பங்குபற்றுதலுடன் 1967நண்பர்கள் அமைப்பினர் செய்துகொடுத்துள்ளனர்.
இறுதியில் கூட்டமொன்றும் நடைபெற்றது. உறுப்பினர் எஸ்.நந்தேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அதிதிகள் உரையாற்றியதைத்தொடர்ந்து அமைப்பின் செயலாளர் எம்.ஜீவராஜ் பொருளாளர் எஸ்.நந்தகுமார் ஆகியோரும் கருத்துரைத்தனர்.
பயனாளியொருவர் நன்றிதெரிவித்துரையாற்றுகையில் குடிநீர்தேவையைப் பூர்த்திசெய்துதந்த சகலருக்கும் எமது வாழ்நாள் நன்றிகள் என்றார்.
காரைதீவில் 1967ஆம் ஆண்டில் பிறந்த நண்பர்கள் ஒன்றுகூடி அமைத்த இவ்வமைப்பு காரைதீவில் பலவேலைத்திட்டங்களை புலம்பெயர்தேசங்களிலுள்ள காரைதீவு 1967நண்பர்களின் உதவியுடன் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.