காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் அதிபரான திரு. தி. வித்யாராஜன் அகவை 60 ஐ நாளை (27.03.2020) பூர்த்தி செய்வதால் இன்றுடன் தனது அரச கல்விப் பணியிலிருந்து ஒய்வு பெறுகிறார்.
இவர் காரைதீவில் மதிப்பு மிக்க குடும்பத்தில், காரைதீவின் குலவிளக்காம் சுவாமி விபுலாநந்தர் பிறந்த அதே மாதம், திகதியில் 1960.03.27 ம் திகதியில் பிறந்தார். இவரது தந்தையார், சுவாமி நடராஜானந்தரின் சகோதரியான அமரர் தெய்வானைப்பிள்ளை அவர்களினதும், பெரியையா என்று மதிப்புடன் அழைக்கப்பட்ட அமரர் தங்கராசா அதிபரினதும் புதல்வரான திருநாவுக்கரசன் (ஓய்வுநிலை ஆசிரியர்) என்பதுடன், இவரது தாயார், அமரர் அழகரெத்தினம் (தபாலதிபர்) அவர்களின் புதல்வியான அமரர் புனிதவதியார் ( ஓய்வுநிலை அதிபர்) ஆவார்.
ஆரம்பக் கல்வியை காரைதீவிலும், பின்னர் மட்டக்களப்பு சிவானந்தாவிலும் கற்று 1988 முதல் பயிற்றபட்ட ஆங்கில ஆசிரியராக கமு/விபுலானந்தா மத்திய கல்லூரியில் கல்விப் பணியை ஆரம்பித்தார். பின்னர், 2008ம் ஆண்டு இலங்கை அதிபர் சேவைக்கு போட்டிப் பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்பட்டு அதே பாடசாலையில் அதிபராக ஓய்வு பெறும்வரை கடமையாற்றினார்.
இவர் இப்பாடசாலையைப் பொறுப்பேற்றதன் பின்னர் இப்பாடசாலையானது பல்வேறு சாதனைகளையும், அபிவிருத்திகளையும் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவற்றில் சில வருமாறு,
- கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் செம்மொழி விழாவை பாடசாலையில் சிறப்பாக நடாத்தியமை
- மாபெரும் கல்விக் கண்காட்சியை 5 நாட்கள் சிறப்பாக நடாத்தியமை
- தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை
- தொழில்கல்வி (13 years Education) பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளமை
- கிழக்கு கரையோரச் சமர் எனும் கிறிக்கட் போட்டியை அம்பாரை மாவட்டத்தில் முதனமுறையாக நடாத்தியமை
- தொடர்ச்சியாக மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றமையும் 30 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுகின்றமை
- பாடசாலைக்கென மைதானம் பெறப்பட்டமை
- இணைப்பானவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் மாகாண, தேசிய ரீதியிலான சாதனை
- பாடசாலைச் சூழலைக் கவின்நிலைப்படுத்தியமை.
- பரிசளிப்பு விழாக்கள், இல்ல விளையாட்டுப் போட்டிகள், செயலமர்வுகளை சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியமை
மேலும் இப்பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கும், தொழில்நுட்ப பீடத்திற்கான கட்டடத்தை பெறுவதற்காகவும் இவரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறும் தறுவாயில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலப் புலமை, நிதானமான அணுகுமுறை, கறைபடியாத கரங்கள், மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான சிந்தனை, ஆன்மீக ஈடுபாடு மற்றும் பெருமைபாராது அடிமட்டத்திலிருந்து கடமையாற்றல் போன்ற சிறந்த பல்வேறு பண்புகளைக்கொண்டு, மாணவர்களின் மரியாதையையும், ஆசிரியர்களின் அன்பினையும், அதிகாரிகளின் நன் மதிப்பையும், சமூகத்தின் வரவேற்பினையும் பெற்று காரைதீவின் முதன்மைக் கல்விச்சாலையின் முதல்வராக 10 வருடங்களுக்கு மேல் கல்விப்பணியாற்றி ஓய்வுபெறும் மணி விழா நாயகர் வித்யாராஜன் சேர் அவர்ககளின் ஒய்வுக்காலம் சிறப்பாக அமைய காரைதீவு .ஓர்க் இணையக்குழு பிரார்த்திக்கின்றது.