புதுப்பொலிவு பெறும் சுவாமி விபுலாநந்த மணிமண்டபம்...! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 6 ஜனவரி, 2020

புதுப்பொலிவு பெறும் சுவாமி விபுலாநந்த மணிமண்டபம்...!

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் அவதரித்த 19ஆம் நூற்றாண்டுகால காரைதீவு இல்லம் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இலங்கையில் இ.கி.மிசன் வியாபிப்பதற்கும் 26மிசன் பாடசாலைகளின்  பரிபாலனத்திற்;கும் ஆணிவேராக திகழ்ந்தவர் சுவாமி விபுலாநந்த அடிகளார் என்பதை உலகறியும்.
இலங்கை அரசின் இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரசநிதியில் சுவாமியின்பிறந்தவீடும் சுவாமி விபுலாநந்த மணிமண்டமும் அதன் சுற்றுப்பிரகாரங்களும் அண்மையில்நவீனமுறையில் புனரமைக்கப்பட்டன.

திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் பரந்துவிரிந்த சேவைநோக்கத்தின் ஒரு பரிமாணமாக இதனைக்காணலாம். அதற்கு கால்கோளாகவிருந்தவர் இந்துகலாசார மாவட்ட உத்தியோகத்தரும் பணிமன்றச்செயலாளருமான  கு.ஜெயராஜி என்றால் மிகையல்ல.
இதற்கென திணைக்களம் சுமார் 50லட்சம்வரை நிதியொதுக்கியிருந்தது. கிழக்குமாகாண கலாசார திணைக்களமும் 5லட்சருபாவை வழங்கியிருந்தது.
இவற்றைக்கொண்டு புனரமைக்கப்பட்ட அவ்வளாகம் இன்று அழகாக காட்சியளிக்கின்றது.

பணிமன்றம் கட்டியெழுப்பிய மணிமண்டபம்.
சுவாமிகள் பிறந்த காரைதீவு மண்ணில் அவரது பணிகளை முன்னெடுக்கவும் ஞாபகார்த்தமாக சிலை மற்றும் மண்டபத்தை நிருமாணிக்கும் நோக்கிலும் 1967இல் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தப் பணிமன்றம் உருவாக்கப்பட்டது. 
அப்போது கிராமத் தலைவராகவும் ஸ்ரீ கண்ணகை அம்மனாலய தர்மகர்த்தாகவுமிருந்த வைத்திய கலாநிதி டாக்டர் மா.பரசுராமன் அவர்களைத் தலைவராகக்கொண்டு இப்பணிமன்றம் இயங்கத் தொடங்கியது.

1969இல் பிரதானவீதியிலுள்ள விபுலாநந்த பொது நூலகத்திற்கு முன்பாக சிற்பி புல்லுமலை நல்லரெத்தினம் என்பாரைக்கொண்டு அடிகளாரின் திருவுருவச்சிலையை நிறுவி தவத்திரு குன்றக்குடி அடிகளாரைக்கொண்டு திறந்துவைத்தது.அச்சமயம் ம.சற்குணத்தை ஆசிரியராகக்கொண்டு 'அடிகளார் படிவமலர்' என்ற நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது. துரதிஸ்டவசமாக பிரதானவீதியிலிருந்த அச்சிலை 1990 இனவன்செயலில்கபளீகரம் செய்யப்பட்டது.
பின்னர் சிலகாலம் தொய்வுற்றிருந்த பணிகள் 1991களில் மீண்டும் உத்வேகம் பெற்றது. 1991மார்ச்சில் அடிகளாரின் பிறந்தஇல்லத்தை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்பதற்காக புதியதொரு நடவடிக்கை செயற்குழுவையும் நியமித்து பணிமன்றம் செயற்பட்டது.அதற்கும் டாக்டர்பரசுராமன் தலைமை வகித்தார்.
சுவாமிகள் பிறந்த இல்லம் 1932இல் சுவாமிகளால் இ.கி.மிசனுக்கு எழுத்pக்கொடுக்கப்பட்டிருந்தாலும்1967முதல் தொடர்ச்சியாக யாரின் தலையீடுமின்றி 52வருடகாலமாக  பணிமன்றமே முன்னெடுத்துவருகிறது. 

அதற்கமைய சுவாமி பிறந்தவீட்டை புனரமைத்த அதேவேளை அருகிலுள்ள காணியை மன்றத்தின் முயற்சியின்பேரில் அரசநிதியில் கொள்வனவு செய்து மணிமண்டபம் அமைக்கும் பணியில் இறங்கினார்கள். அதற்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ஜெ.திவ்வியநாதனின் நிதியுதவி பெறப்பட்டது.
மணிமண்டபத்திற்கான அரசநிதி.
மணிமண்டபம் நிருமாணிப்பிற்கு முதலில் முன்னாள் ஜனாதிபதி  ஆர்.பிரேமதாசா நிதியிலிருந்து 2லட்சருபாவை முன்னாள் அமைச்சர் எ.ஆர்.மன்சூர் பெற்றுத்தந்தார். மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை இ.கி.மிசன் இலங்கைத்தலைவராகவிருந்த சுவாமி ஆத்மகனானந்த ஜீ 23.11.1991இல் -நட்டுவைத்தார்.

தொடர்ச்சியாக பணிமன்றத்தின் முயற்சி காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களான பி.பி.தேவராஜ் சுரேஸ்பிரேமச்சந்திரன் பி.ஸ்ரீனிவாசன் மாவை சேனாதிராஜா நீலன்திருச்செல்வம்  கோ.கருணாகரம் எம்.எ.மஜீட் ஆகியோர் அரசநிதியை வழங்கினர்.

எனினும் இரண்டு மாடிகளைக்கொண்ட அம் மண்டபப்பணி பூர்த்தியாகவில்லை. அதற்காக முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களை அணுகியபோது அவர்கள்இனநல்லிணக்கம் கருதி இருகட்டங்களாக 43லட்சருபாவைத்தந்து மண்டபத்தை 1999இல் திறந்துவைத்தார். அச்சமயம் தலைவராக வெ.ஜெயநாதன் பணியாற்றினார்.

அவ்வமயம்சிலையொன்றை நிறுவினர். அதனை மணிமண்டப முன்றலில் இ.கி.மிசன் தலைவர் ஆத்மகனானந்தா ஜீ திறந்துவைத்தார். அவ்வேளையில் பணிமன்ற நிருவாகசபை உறுப்பினர் வி.ரி.சகாதேவராஜா அவர்களை ஆசிரியராகக்கொண்டு 'அடிகளார் நினைவாலய மலர் ' என்ற நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
அதாவது சுமார் 8வருடங்களாக அரச பிரதிநிதிகளிடம் பிச்சையெடுத்து ஊருக்கான இந்நினைவாலயம் அரசநிதியிலே பணிமன்றத்தால் கட்டியெழுப்பப்பட்டது. இ.கி.மிசன் அல்லது வேறு தருமஸ்தாபனங்கள் எதுவும் இப்பணிக்கு சிறுநிதியைக்கூடவழங்கமுன்வரவில்லை. 

ஆக எவ்வித வெளியார் தலையீடுகளுமின்றி தொடர்ச்சியாக 52 வருடங்கள் சுதந்திரமாக சுவாமி பிறந்த இல்லத்தை பராமரித்து வந்ததன் அடிப்படையிலும் பணிமன்றம்  கட்டியெழுப்பிய மணிமண்டபத்தை சுமார் 30வருடங்களாக பராமரித்து நிருவகித்து  வந்ததன் அடிப்படையிலும்பணிமன்றத்தினரின்  பணிகள்பாராட்டுக்குரியவை எனலாம்.

இன்று மணிமண்டபத்தில் பண்ணிசைவகுப்புகள் பரதநாட்டிய வகுப்புகள் நாயன்மார்களின் குருபூஜைகள் குருதேவராம் இராமகிருஸ்ணபரமஹம்சர் சுவாமி விவேகானந்தர் அன்னை சாரதா சுவாமி விபுலாநந்தர் சுவாமி நடராஜானாந்தர் ஆகியோரின் ஜனன சிரார்த்த ஜெயந்திதின விழாக்கள் மற்றும் ஆன்மீக கூட்டங்கள் விழாக்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.

சுவாமி விபுலாநந்த அடிகளார் விட்டுச்சென்றபணிகளை பணிமன்றத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டும் என்பதே அனைவரினதும் அவா.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
முன்னாள் தலைவர் சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்றம் காரைதீவு.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages