தீபாவளிப் பண்டிகையை யொட்டி காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகம் அமரர் திரு,திருமதி அருளானந்தம் தம்பதியினரின் ஞாபகார்த்தமாக (10) நடாத்திய 'கே.பி.எல். ஹொக்கி செவன்ஸ் ' முக்கோண சுற்றுப்போட்டியில் சிவா சலஞ்சஸ் அணி வெற்றிவாகை சூடியது.
முதல் தடவையாக கடந்த தீபாவளியன்று(27) ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவிருந்த இப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டடு (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கழகத்தலைவர் தவராசா லவன் தலைமையில் காரைதீவு விபுலாநந்த மத்தியகல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் ஓய்வுநிலை முகாமையாளர் அருளாநந்தம் மகேந்திரராஜா கலந்து சிறப்பித்தார்.
நட்சத்திர அதிதிகளாக காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் தி.உமாசங்கரன், விபுலாநந்தா பிரதி அதிபர் ம.சுந்தரராஜன், சிரேஷ்ட விளையாட்டாசியர்களான சி.சிவபரன் ஜெ.சோபிதாஸ் க.அமிர்த பிரகாஸ் உள்ளிட்ட பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அணிக்கு 7 பேர் கொண்ட இம் முக்கோண சுற்றுப்போட்டியில் சிவா சலஞ்சர்ஸ் அணி நிமால் நைற்றைடர்ஸ் அணி சகா சுப்பர்கிங்ஸ் அணி ஆகிய 3 ஹொக்கி அணிகள் மோதியன. சிவா சலஞ்சஸ் முதலிடத்தையும் நிமால் நைற்றைடர்ஸ் அணி சகா சுப்பர் கிங்ஸ் அணி முறையே 2ஆம் 3ஆம்இடங்களைப்பெற்றது.வெற்றிபெற்றஅணிகளுக்கு வெற்றிக் கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில் 2019இல் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.