வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் ஆடிவேல்திருவிழாயையொட்டி வருடாந்தம் இடம்பெற்றுவரும் இலங்கையில் அதிகூடிய நாட்களையும் தூரத்தையும் கொண்ட யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை இம்முறை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதயாத்திரைக்குழுவின் தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:
வழமைபோல பாதயாத்திரைக்குமுன்பாக பாதுகாப்பு அமைச்சு இந்துகலாசார அமைச்சு மெனராகலை அரசஅதிபர் உள்ளிட்ட பலருக்கு எழுதிய கடிதத்திற்கு இன்னும் எதுவித பதிலும் வரவில்லைபாதுகாப்புத்துறையினரின் பதில் கடந்த ஒவ்வொருவருடமும் கிடைக்கப்பெற்றிருந்தது. இம்முறை அது இன்னும் கிடைக்கவில்லை
மேலும் உற்சவகாலம் தொடர்பிலும் முரண்பாடு இருப்பதால் மொனராகலை அரசஅதிபருக்கு கடிதம் எழுதியிருந்தோம். அதற்கும் பதில் கிடைக்கவில்லை
அதாவது இந்தவருடம் அஸ்ட்டலக்ஷமி தமிழ்கலண்டரில் கதிர்காமக் கொடியேற்றம் 02.07.2019இல் நடைபெறுமென்றும் தீர்த்தோற்சவம் 18.07.2019இல் நடைபெறுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கில கலண்டரில் கதிர்காம எசலபெரஹரா 16.07.2019இல் நடைபெறுமெனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கதிர்காமம்.கொம் இணையத்தளத்தில் கதிர்காமக் கொடியேற்றம் 31.07.2019இல் நடைபெறுமென்றும் தீர்த்தோற்சவம் 15.08.2019இல் நடைபெறுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எங்களைப்பொறுத்தவரை குழப்பமாகவுள்ளது. கடந்த காலத்தில் இப்படியானதொரு சர்ச்சை நிலவியபோது அந்த வருடம் தாம் ஒருமாதகாலம் சொல்லொணாக் கஸ்ட்டப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் இடைநடுவில் தாமதிக்கவேண்டி ஏற்பட்ட அவலநிலையை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே நாங்கள் முறைப்படி பாதயாத்திரையை உரியதினத்தில் ஆரம்பிப்பதற்கு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக கதிர்காம உற்சவ காலத்தை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம் எனக்கேட்டிருந்தோம்.
ஆனால் பதில் வரவில்லை. அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.
மேலும் சமகால நாட்டின் சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு யாழ்ப்பாண பாதயாத்திரீகர்களும் சற்றுபின்வாங்கினர்.
மேற்குறித்த காரணங்களால் அம்மறை பாதயாத்திரை ரத்துச்செய்யப்பட்டள்ளது.
எனினும் அக்கரைப்பற்று அல்லது திருக்கோவில் முருகனாலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்வது பற்றி பலரும் விதந்துரைத்துள்ளனர். சாத்தியமானாலட அதுபற்றிபின்னர் அறிவிக்கப்படும். என்றார்.
திரு.வி.ரி.சகாதேவராஜா