காரைதீவு ஆனந்தா முன்பாடசாலை சிறார்களின் Annual Kuddies Concert- 2018 நிகழ்வு பாடசாலையின் பணிப்பாளர் சத்தியா-தழிழ்ச்செல்வன் தலைமையில் 01.12.2018 காரைதீவு கலாசார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ கி.ஜெயசிறில் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மேலும் பல கௌரவ அதிதிகளும், சிறப்பு அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
முதலில் சின்னஞ்சிறார்களின் Band வாத்திய இசை அணிவகுப்புடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு, தொடர்ந்து மங்களச்சுடர் ஏற்றப்பட்டு, இறைவணக்கமும், சிறார்களின் வரவேற்பு நடனமும் கலைநிகழ்வின் சிறந்த ஆரம்பமாக இருந்தது.
பணிப்பாளர் தனது உரையில், 'ஆனந்தா முன்பாடசாலையானது எமது சிறார்களுக்கு பாடசாலைக் கல்விக் கலைத் திட்டத்தினுள் நுளைவதற்கு தேவையான அனைத்து தேர்ச்சிகளையும் செயல் திறன் மிக்கவிதத்தில் வழங்குவதாலும், தனது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையாலும், பெற்றோர் இப்பாடசாலையை அதிகம் விரும்புகின்றார்கள். இதனால் மிக குறுகிய காலத்தில் எமது பாடசாலை துரித வளர்ச்சியடைந்ததாகவும், எதிர்காலத்தில் மேலும் சிறந்த முறையில் பல அர்ப்பணிப்புக்களுடன் இப்பாடசாலை செயற்படும் என்பதையும் குறிப்பிட்டார்'.
இங்கு உரையாற்றிய அதிதிகள் எமது ஊரில் முன்பாடசாலைகளுக்கான கலைத்திட்டத்தை விழிப்படையசெய்த பெருமையுடைய பாடசாலையாக இந்த ஆனந்தா முன்பாடசாலை மிளிர்வதுடன், புதுமைகள் படைப்பதையும், புத்தாக்க சிந்தனையுடன் செயற்படுவதையும் எவருமே மறுதலிக்கமுடியாது எனவும் கூறினர். இதற்கு ஆதாரமாக மாணவர்களின் அனைத்துக் கலை நிகழ்வுகளும் மிகச்சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களிடம் இத்தனை ஆற்றல்கள் இருக்கின்றனவா? என வியப்படையக்கூடிய வகையில் இருந்ததாகவும் உடைஅலங்காரங்கள், நிகழ்வுகளை ஒழுங்குசெய்த விதம் அனைத்தும் மிகப்பிரமாதம் எனவும், இன்று இந்த மேடை அலங்கரிக்கப்பட்டுள்ள விதம், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு என்பவற்றை அவதானிக்கும்போது அடுத்து என்ன நிகழ்வு வரும் என்ற ஆர்வத்துடன் எல்லோரும் இருந்ததை காணமுடிந்ததாகவும் தெரிவித்தனர். இதனால் ஆனந்தாவின் புதுமையும், புத்தாக்க சிந்தனையும் நன்கு வெளிப்படையாகின்றது எனவும் அதிதிகள் ஆனந்தாவை பாராட்டினார்கள்.
இறுதியாக நன்றியுரையினை திருமதி பிறேமவாகினி-தயாளன் நிகழ்த்தினார். மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் பிற்பகல் 1.30 அளவில் நிறைவடைந்நது.