2000வருடங்கள் பழைமைவாய்ந்த வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான இராஜகோபுர நிருமாணப்பணிகளை ஆரம்பித்துவைப்பதற்கான கால்கோள் இடும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(22) நடைபெறவுள்ளது.
திங்கட்கிழமை(22) காலை 9மணி முதல் 9.45மணி வரையிலான சுபநேரத்தில் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் முன்னிலையில் இவ்வரலாற்று நிகழ்வு நடைபெறவிருப்பதாகவும் பல முக்கிய அரசியல் ஆன்மீகப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவிருப்பதாகவும் ஆலய நிருவாகசபைச் செயலாளர் க.கு.ஸ்ரீபஞ்சாட்சரம் தெரிவித்தார்.
1865 இல் முறைப்படி ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட இவ்வாலயம் 2001இல் குடமுழுக்குக்கண்டு இறுதியாக 2014இல் மகா கும்பாபிசேகத்தைக்கண்டது.
2000வருடங்கள் தொன்மைவாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இராஜகோபுரம் அமையவிருக்கும் முதல்நாள் கண்கொள்ளாக்காட்சியைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடுவார்;களென எதிர்பார்க்கப்படுகின்றது.
கதிர்காமத்திற்கு பாதயாத்திரைசெல்வோர் தங்கிச்செல்லும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கானகத்தின் மத்தியிலே உவப்பான மனோரம்மியமான சூழலில் இவ்வாலயம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.