ஓம் சக்தி
தனம்தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும், நல்லன எல்லாம் தரும் "அபிராம வல்லியை" வணங்கும் நவராத்திரி விரதம்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
ஓம் சக்தி
தனம்தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும், நல்லன எல்லாம் தரும் "அபிராம வல்லியை" வணங்கும் நவராத்திரி விரதம்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
நவராத்திரி விரதம் நிகழும் விளம்வி வருஷம் 09.10.2018 செவ்வாய்கிழமை ஆரம்பமாகி ஒன்பது தினங்கள் நடைபெற்று 10 வது தினம் (விஜய தசமி தினம்) மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாளாக வன்னி வாழை வெட்டி வெற்றி விழாவாக கொண்டாடப்பெறும் தினமாக ஜோதிடம் கணிக்கின்றது.
வழக்கமாக புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் நவராத்திரி விரத நாட்களாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.
சில சந்தற்பங்களில் இவை விரத நாட்கள் கூடிக் குறைந்து வருகின்றபோது; துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி தேவியற்கு நாட்களைப் பகுக்கும்போது ”விரத நிர்ணய விதி” முறை” பின்பற்றப் பெறுகின்றது. அதன் பிரகாரம் சரஸ்வதிக்குரிய நாளை மூலநட்சத்திர நாளில் ஆரம்பித்து திருவோண நட்சத்திர நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்பது விரத நிர்ணய நியதி.
அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும்
அடுத்த மூன்று நாள்கள் ஆனால் இவ் வருடம் 4 நாட்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (பேறு பதினாறும்) வேண்டியும்,
கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை வித்தை, கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.
புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும்; தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரி தினங்களிலேயே நாம் எல்லோரும் விரதம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்கின்றோம்.
கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி எம் முன்னோர் இவ் விரதத்தை அனுஷ்டித்து வந்துள்ளனர்.
பூவுலகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக எல்லாப் பூஜைகளும் பகல் நேரத்தில் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகள் செய்யப்பெறுகிறன.
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை 'தேவி பாகவதம்' விரிவாகப் பேசுகிறது.
பிரபஞ்சவுற்பத்திக்கு காரணமான இறைவன் அனேக மூர்த்தங்களின் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் விளங்கிய போதிலும் அவையனைத்தையும் ஒன்றாக்கித் தாயான ஸ்வரூபத்தில் வழிபடுதல்தான் பெரும்பயனைத் தருமென"பிரபஞ்சவுற்பத்தி" எனும் நூல் கூறுகின்றது.
பரப்பிரம்மத்தையே பராசக்தி அன்பினால் கட்டுப்படுத்தியுள்ளாள் என்பதை உலகைப் படைக்கும் பிரம்மாவையும், காக்கும் விஷ்ணுவையும் அழிக்கும் உருத்திரனையும் இவர்கட்கு மேலாகவிருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்தி அவர்களது தத்துவார்த்தங்களை அவர்கள் மூலமாகவே இயற்றுவிக்கிறாள்.
அத்தனை தெய்வங்களுமே, அந்தத் தேவியின் ஒப்பற்ற மாயையினால்தான் திகழ்கிறார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே. பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள் அவளே. முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே.
பிரபஞ்சத்தில் பிறவி எடுத்த நாம் அனைவருமே அநித்யம். ஆனால் ஜெகதாம்பிகை ஒருவளே நித்திய யுவதி. அவளைத் தூய்மையான உள்ளத்தோடு தியானித்து, துதி செய்தால் அருட் கடாட்சத்தை அள்ளி வழங்குவாள். அம்பிகை அருளைப் பெற; அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னியா ராசியும் அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும்.
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் அறிவு வளமும் மிகவும் அவசியம். அதனை வெளிப்படுத்த உடல் வலிமையின் சக்தியாக ஸ்ரீதுர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாக ஸ்ரீமஹா லக்ஷ்மியையும் அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக ஸ்ரீசரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி எனப்படும்.
இந்த அற்புத விரதம் தேவி விரதங்களுட் சிறந்த ஒன்றாகும். ஸ்கந்தபுராணத்தில் இம் மகிமை பேசப்படுகிறது. அமாவாசைத் திதி தொடர்பின்றி அதிகாலையில் பிரதமை திதி வியாபித்திருக்கும் நாளே நவராத்திரி ஆரம்பதினமாகும். மறுநாட்காலை பிரதமை அற்றுப் போய் விடுமாயின் முதல் நாளில் விரதம் கொள்ளல் வேண்டும்.
பிரதமை தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும். நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் (மனத் தைரியம்) இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்மாகும்.
இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும்.
ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் எவ்வெவ் தேவியருக்கு எத்தனை நாட்கள் என்ற பிரச்சினை எழுவதுண்டு. அதற்கு வேறொரு விதியும் சொல்லப்படுகிறது. சரஸ்வதியை மூல நட்சத்திரத்தில் ஆவாஹுனம் செய்து வழிபடத் தொடங்கி திருவோண நட்சத்திரத்தில் உத்வாசனம் செய்ய வேண்டும். அதனால் சரஸ்வதிக்குறிய நாட்களை தெரிவு செய்த பின்னர் ஏனைய நாட்களை உசித்தப்படி துர்க்கைக்கும் லஷ்மிக்கும் பிரித்துக்கொள்ளலாம்.
சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர்.
இதில் துர்க்கை வீரத்தை (தைரியத்தை) அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி (அறிவு) கல்வியை அருள்பவளாகவும்விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.