வரட்சிநிலவும் கிராமங்களில் 20நீர்த்தாங்கிகள் வைக்கப்படும் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 29 ஆகஸ்ட், 2018

வரட்சிநிலவும் கிராமங்களில் 20நீர்த்தாங்கிகள் வைக்கப்படும் !!!

வரட்சிநிலவும் கிராமங்களில் 20நீர்த்தாங்கிகள் வைக்கப்படும்மழைக்காக பிரார்த்தனைசெய்யுங்கள்:நிரந்ததீர்வுக்கு 200மில்லியன்ருபா தேவை அவசரகூட்டத்திலிருந்து திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன்..

கொடியவரட்சி மற்றும் குழாய்நீர்விநியோகம் துண்டிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேசத்தில் நிலவும் குடிநீர்த்தட்டுப்பாட்டை தற்கலிகமாக நிவர்த்திசெய்ய 20நீர்த்தாங்கிகள் வைக்கப்படும். வரட்சி நீடிப்பின் நிலைமை மேலும் மோசமாகும். எனவே பொதுமக்கள் ஆலயங்களில் விசேடவழிபாட்டையும் பிரார்த்தனையையும் மேற்கொள்ளுங்கள்.

இவ்வாறு திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.

திருக்கோவிலில் நிலவும் மோசமான குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக (28.08.2018) திருக்கோவில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அவசரமாக கூடிய கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தைக்கூறுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜன் தேசியநீர்வழங்கல்வடிகாலமைப்புச்சபையின் திருக்கோவில் பிரதேசபொறுப்பதிகாரி கே.கமலகாந்தன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜன் ஆகியோர் கூட்டத்தீர்மானம்பற்றி  விபரிக்கையில்:

நாம் தேசியநீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையிடம் 20சிறிய நீர்த்தாங்கிகளை கேட்டுள்ளோம். அவற்றை நாளைமுதல் வரட்சி நிலவும் குடிநீரின்றிக்கஸ்ட்டப்படும் கிராமங்களில் முக்கியமான இடங்களில் வைக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக தம்பட்டையிலிருக்கின்ற உள்ளகநீர்க்குழாய் அமுக்க உயர்த்தி நிலையத்தைப்போல் திருக்கோவில் சகலகலை அம்மனாலயத்திற்கு அருகில் புதிதாக ஒரு உபநிலையத்தை அமைக்கும் பட்சத்தில் குடிநீர்ப்பிரச்சினையில் சமகாலதேவையை பெரும்பாலும் நிவர்த்திசெய்யமுடியும். எனவே அதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பதென முடிவாகியது.

இரண்டு மூன்று தினங்களுள் அதுநிறைவேறியதும் தற்சமயம் மோசமாகப்பாதிக்கபட்டுள்ள பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நீரை விநியோகம்செய்யமுடியும் என எதிர்பார்க்கின்றோம்.

எமது பிரதேசத்திற்கு பிரதானமாக குடிநீரை விநியோகிக்கின்ற சாகாமம் நீர்சுத்திகரிப்பு மையம் கடந்த இரண்டுவாரகாலமாக குழாய்நீர்விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

இதனால் எமது பிரதேசத்தில் மிகவும் மோசமாக 1970குடும்பங்கள் குடிநீரின்றிப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக குழாய்நீர்விநியோகம் அரையும்குறையுமாகவுள்ள அதாவது 40வீதத்தைப்பெறும்  கஞ்சிகுடிச்சாறு காஞ்சிரன்குடா தங்கவேலாயுதபுரம் ஸ்ரீவள்ளிபுரம் மண்டானை குடிநிலம் சாகாமம் தாண்டியடி நேருபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு  ஒருதுளி தண்ணீர்கூட இல்லை.இவர்களுக்கு பிரதேசசபையும் பிரதேசசெயலகமும் இணைந்து 3 நீர் பவுசர்களில் மக்களுக்கு குடிநீரை மட்டும் வழங்கிவருகின்றது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையும் ஒருபவுசரில் குடிநீர் வழங்கிவருகின்றது.

ஆனால் இது அவர்களுக்கு குடிப்பதற்குக்கூட போதுமானதல்ல.
ஏனைய குளிப்பு மலசலப்பாவனை உடுப்புத்துவைத்தல் போன்ற இன்னொரன்ன தேவைகளுக்கு அந்த மக்கள் நீண்டதூரம் சிறுகுளங்களை நாடவேண்டியுள்ளது. அவையும் தற்போது படிப்படியாக வற்றிவருகின்றன.

அக்கரைப்பற்றுக்குச் சென்று பவுசரில் இந்த தண்ணீர்கொண்டுவரப்படுகின்றது. இதனால் நாளொன்றுக்கு 2 அல்லது 3தடவைகள்தான் கொண்டுவரமுடியும்.இன்றையகூட்டத்தீர்மானத்தின்படி நீர்வழங்கல் சபையினர் மேலதிகமாக ஒரு பவுசரையும் பாவனையில் ஈடுபடுத்த இணங்கியுள்ளது.

இனி நாம் மூன்றுதரப்பினரும் பிரதேசத்தைப்பிரித்து நாட்களையும் பிரித்து நீரை தொடர்ச்சியாகவழங்குவதென்று தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை குழாய்நீர் விநியோகத்தில் 60வீதமான வழங்கலைப்பெறும் தம்பட்டை தம்பிலுவில் திருக்கோவில் வினாயகபுரம் போன்ற கிராமங்களில் ஆங்காங்கே சொந்தக்கிணறுகளிருப்பதனால் ஒருவாறு சமாளித்துவருகின்றார்கள். வரட்சி நீடித்தால் அவர்களும் மேற்சொன்ன பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள்.

திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் கூறுகையில்:

உண்மையில் இப்பரச்சினையைத்தீர்ப்பதாயின் மழையைத்தவிர வேறு மார்க்கம் இல்லை. அது இறைவனின் சித்தம். இருந்தும் திருக்கோவில் பிரதேச குழாய்நீர் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் வழங்குவதென்றால் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது கொண்டவட்டவான் நீர்த்தேக்கத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு நீர்த்தொட்டிக்குவரும் நீரை அங்கிருந்து  நேரடியாக சாகாமத்திற்கு விநியோகம் செய்யும்வண்ணம் ஒரு திட்டத்தை முன்னெடுத்தால் இது சாத்தியமாகும்.இதற்கு 200மில்லியன் ருபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனமெடுத்தால் திருக்கோவிலுக்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்படுத்தி அந்த மக்களின் தேவையை பூர்த்திசெய்யமுடியும் என்றார்.

(காரைதீவு நிருபர்)



Post Bottom Ad

Responsive Ads Here

Pages