கிழக்கில் வறுமைப்பட்ட ஏழைமக்களுக்கு கண்புரைநோய் சத்திரசிகிச்சை இலவசம்! லண்டன் டாக்டர் ராதா தர்மரெட்ணம் கல்முனையில் உரை!
(காரைதீ வு நிருபர் சகா)
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு மட்டுமன்றி கிழக்கில் பலபாகங்களிலுமுள்ள வறுமைக்கோட்டின்கீழ் வாழும் ஏழைமக்களுக்கு கண்புரைநோய்(கற்றரக்ட்)சத்திரசி கிச்சையை இலவசமாக மேற்கொள்ள ஆவலாயிருக்கிறோம்.
இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்புரைநோய் (கற்றரக்ட்) சத்திரசிகிச்சை முகாமை நிறைவுசெய்து உரையாற்றிய லண்டன் கண்வைத்தியநிபுணர் டாக்டர் ராதா தர்மரெட்ணம் தெரிவித்தார்.
மேற்படி கண்புரைநோய் சத்திரசிகிச்சை முகாம் நேற்று(16) சனிக்கிழமை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் நடைபெற்றது.
லண்டனிலிருந்து வந்த இருபெரும் வைத்தியநிபுணர்களான டாக்டர் ராதாதர்மரெட்ணம்(களுவாஞ்சிக்குடி ) டாக்டர் காந்தா நிரஞ்சன்(மட்டக்களப்பு) ஆகியோரின் முயற்சியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மட்டு.அம்பாறை மாவட்ட 75 கண்புரை நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை முகாமை நடாத்தினர்.
சுமார் 15லட்சருபா பெறுமதியான கண்வில்லைகள் தொடக்கம் அத்தனை செலவுகளையும் அமெரிக்காவின் சர்வதேச மருத்துவ மனிதாபிமான அமைப்பும் அமெரிக்காவிலுள்ள டாக்டர் சுபத்ரா சிவகுமார் பொறியிலாளர் சிவகுமார்(பண்டிதர் வீ.சீ.கந்தையாவின் மகன்) குடும்பத்தினரும் இதற்கான முழுச்செலவையும் ஏற்றிருந்தனர்.
கண்டி வைத்தியசாலையில் சேவையாற்றும் கண்வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் பூ.சிறிஹரநாதன்(கல்லடி) கல்முனை ஆதாரவைத்தியசாலையின் கண்வைத்தியநிபுணர் பாக்யா மேகலானி வீரசிங்கவும் இலவசமாக இச்சத்திரசிகிச்சைகளை நடாத்தினர்.
களுவாஞ்சிக்குடி நலன்புரி அமைப்பினர் நோயாளர்களுக்கான போக்குவரத்து உணவு தொடக்கம் அத்தனை நலன்புரிவிடயங்களுக்கும் பொறுப்பாக இருந்து செயற்பட்டனர்.
முகாமின் இறுதியில் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் முடீவுறு நிகழ்வொன்று அத்தியட்சகரின் பணிமனையில் நடைபெற்றது.
அங்கு டாக்டர் ராதா தர்மரெட்ணம் மேலும் உரையாற்றுகையில்:
கண்சத்திரசிகிச்சைக்குத் தேவையான அவசியமான உபகரணமொன்றை வவுனியாவிலிருந்து பெற்றுத்தர லண்டனிலுள்ள சர்வேஸ்வரன் உதவியிருந்தார். இங்கு வைத்திய அத்தியட்சகர் முரளி சிஸ்ரர் விஜி மயக்கமருந்து நிபுணர் தேவகுமார் சத்திரசிகிச்சைக்கூட ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிதெரிவிக்கின்றேன். என்னுடன் டாக்டர் காந்தா நிரஞ்சன் லண்டனிலிருந்துவந்துள்ளார்.அவரு க்கும் நன்றிகள். என்றார்.
வைத்தியகலாநிதி டாக்டர் காந்தா நிரஞ்சன் உரையாற்றுகையில்:
இந்தத்திட்டமானது கிழக்கு மாகாணமெங்கும் விஸ்தரிக்க புலம்பெயர்ந்தோர் உதவவேண்டும்.என்றார்.
நிகழ்வில் மயக்கமருந்து நிபுணர் டாக்டர் வி.எஸ்.தேவகுமார் வைத்தியநிபுணர்களான ராதாதர்மரெண்டனம் காந்தா நிரஞ்சன் உள்ளிட்ட பலரின் தன்னலமற்றசேவைக்காக வைத்தியசாலை நிருவாகம் பொன்னாடைபோர்த்துக் கௌரவித்தது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் அனைவருக்கும் நன்றிதெரிவித்துப்பேசினார்.