காடுமண்டி போக்குவரத்திற்கு பொருத்தமில்லாமலிருந்த ஏரிக்கரைவீதிகள் சுத்தம்!
புதிய தவிசாளரின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் வாழ்த்து!
நீண்டகாலமாக பராமரிப்பில்லாமல் காடுமண்டிக்கிடந்த காரைதீவின் ஏரிக்கரைவீதிகள் கனரக வாகனம்கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலின் தலைமையில் சபை ஊழியர்கள் லீவு என்றும் பார்க்காமல் இப்பாரிய செயற்பாட்டில் நேற்று ஈடுபட்டனர். கூடவே சபைச்செயலாளர் அ.சுந்தரகுமாரும் அங்கிருந்தார்.
காரைதீவின் மத்தியை ஊடறுத்துச்செல்லும் ஏரியின் இருமருங்கிலுமிருந்த அடர்ந்த பற்றைகள் செடிகொடிகள் மரங்கள் யாவும் வெட்டி சுத்தம் செய்யப்பட்டன.
ஏரியின் இருமருங்கிலுமுள்ள வீதிகள் கடந்தகாலங்களில் காடுமண்டி இருளாக போக்குவரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன.
பகலிலும் இரவிலும் பயணிப்பதற்கு பொருத்தமில்லாமல் இருந்துவந்தது.பெண்கள் பயணிக்கமுடியாமலிருந்தது. அவசரமாகச்செல்லவேண்டுமெனின் பயத்துடன் செல்லவேண்டியிருந்தது.
காடுமண்டிக்கிடந்தமையினால் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கும் மது அருந்துதல் புகை பிடிப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாகவிருந்தது. அங்கு சட்டவிரோத செயல்களும் சமுக சீர்கேடுகளும் தாராளமாக இடம்பெற்றுவந்தன.இதனால் இவ்வீதிகளினால் மக்கள் பயணிக்க அஞ்சினர். பகலிலும் இவ்வீதிகள் இருட்டாகக் காணப்படும்.
'கடந்தகால நிருவாகங்கள் இதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. புதிய தவிசாளர் ஜெயசிறில் துணிந்து விரைவாக இப்பாதையை துப்பரவாக்கி போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றித்தந்தமைக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் ' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தற்போது இவ்வீதிகளினால் எந்நேரமும் அச்சமன்றி போக்குவரத்து செய்யக்கூடியதாயுள்ளது என்று பலரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இச்சுத்தமாக்கல் செயற்பாட்டில் தவிசாளர் ஜெயசிறிலும் கூடவேநின்று கண்காணித்ததுடன் இதுபோன்று வேறெங்காவது சுத்தம் செய்யப்படவேண்டுமாகவிருந்தால் பிரதேசசபையில் முறையிடலாமென அவர் அங்கு கூறியுள்ளார்.